Posts filed under 'கவிதை'
பெண் எனப்படுபவள்…
வெளியூருக்கோ
வெளிக்கிளம்பலோ
தவறாமல்
வீட்டுப்பெண்களிடம்
விசாரிக்கும்
ஒரு குரல்
தொலைகாட்சிமுன் அமர்ந்தபடி
வெளித்திண்ணையில் நடந்தபடி
அடுப்பை அணைத்தாயா
பின்கட்டு கதவு சாத்தினாயா
பூட்டு சாவி எடுத்தாயா
தண்ணீர் பாட்டில் உள்ளதா
இன்னும் பல..பல..
கரைந்து கடந்த
நிமிடங்கள் தொலைந்தபின்
அவசரப்படுத்தும் அதே குரல்
அர்த்தமின்றி கேட்கும்
இன்னும் ஒரு கேள்வி
இவ்வளவு நேரம்
என்ன செய்தாய் என்று
4 comments நவம்பர் 5, 2009
பெண் எனப்படுபவள்
உங்கள்
காதலை
சம்மதிக்கும் வரை
கடவுளாகத்தானே
எங்களை
கண்டீர்கள்
பின்பு ஏன்
அணிவித்தீர்கள்
வித..வித..முகமூடிகளை
தோழி என்றும்
காதலி என்றும்
மனைவி என்றும்
குடுமபத்தலைவி என்றும்..
2 comments அக்டோபர் 31, 2009
பெண் எனப்படுபவள்
வெறும்
வார்த்தைகள் என்றோ
வெற்றுப்புலம்பல்கள்
என்றோ
ஒதுக்கித்தள்ளிய நாள் முதல்..
வளர்கிறீர்கள்
நீங்களும்
மனிதத்திலிருந்து
வெளியே…
4 comments அக்டோபர் 24, 2009
பெண் எனப்படுபவள்
சட்டென
ஒற்றைப்பார்வையில்
நிறுத்திவிட முடியும்
எல்லா
சாட்டை சுழற்ச்சிகளையும்
பயக்கயிறுகள்
அவ்வப்போது
அறுக்கப்பட்டபோதும்
குறைந்த பட்ச்ச
குணமிருப்பதால்
மருகிக்கொண்டிருக்கிறோம்
படைக்கப்பட்ட நாள் முதல்
வெறும் பந்தயக்குதிரைகளாய்
4 comments அக்டோபர் 24, 2009
பெண் எனப்படுபவள்…
எல்லா
விசேஷ நாட்களிலும்
தவறாமல்
கேட்ப்பாய்
விசேஷமாய்
இன்று என்ன என்று
உனக்குப்பிடித்த
உணவு சமைத்தலிலும்
உனக்குப்பிடித்த
ஊர்ச்சுற்றலிலும்
களைத்து துவள்கையில்
நானும் அனுபவிக்கிறேன்
விசேஷமாய்
அதிகப்படியான
வேலைப்பளுவை
2 comments அக்டோபர் 21, 2009
பெண் எனப்படுபவள்…
சட்டென்று
வெளியேற முடிவதில்லை
உங்களைப்போல்
மாற்று உடைகளோடு
சில சமயம்
மாற்று
இதயத்தோடு
2 comments அக்டோபர் 21, 2009
பெண் எனப்படுபவள்…
விதியின் மீது
அப்படியொன்றும்
நம்பிக்கையில்லை
எங்களுக்கு
எங்களின்
எல்லா வார்த்தைகளுக்கும்
எதிர்மறையாகவே
நீங்கள்
பொருள்கொள்ள
தொடங்கிய
நாள் வரை
6 comments அக்டோபர் 5, 2009
பெண் எனப்படுபவள்…
உனக்கு மகளாக பிறக்கச்சம்மதித்து
உன்னுடன் இணையாக வளரச்சம்மதித்து
உனக்காக உருகி வாழச்சம்மதித்து
உன்னையே மறுபடியும் பெற்றெடுக்கச்சம்மதித்து….
விரும்பித்தான் நேசிக்கிறோம்
வெவ்வேறு வடிவங்களில்..
விட்டு விலகிடும் எண்ணமில்லை
எவ்வழியிலும்
மொத்த வாழ்வையும்
பிய்த்து பிய்த்து கொடுத்தபின்னும்
எவ்வடிவிலும் முழுமையாய்
நிறைய மறுப்பதேன்
உனக்கு கொடுத்த எந்த
உறவுக்கோப்பையிலும்..
4 comments செப்டம்பர் 26, 2009
பெண் எனப்படுபவள்…
விரல் நீட்டி
ஒரு குற்றம் சொல்ல..
நெருப்புத்துளி ஒன்று
தெறித்தது போல்
வலி என்றால்
பலகாலமதை
எரிமலைக்குழம்பாய்
இதயத்தில் சுமக்கும் பெண்கள்
விலகாத வேதனை
நீ விளங்குவதெப்படி..
2 comments செப்டம்பர் 25, 2009
பெண் எனப்படுபவள்…
ஐந்தாம் வகுப்பில் ஆனந்தியைப்பிடிக்கும்
எட்டாம் வகுப்பில் எலிசபெத்திடம் நேசம்
பத்தாம் வகுப்பில் பார்வதியிடம் கண்களால் காதல்
கல்லூரியில் கொஞ்சம் தைரியமாய்
கல்பனாவோ கார்த்திகாவோ!..
திருமணம் என்றதும்
நடிகையின் சாயலில்
அதற்க்குப்பின்னும்
மனைவிதவிர
மற்றவர்களையும் ரசிக்கிறாய்
கடந்த காதல்
கதைகள் சொல்லி
பலர்முன்
கைதட்டி சிரிக்கிறாய்
மிகப்பிடித்த முகம் கூட
உனை பிடித்த நொடி மறக்க..
வாய் பிளந்து கதைகேட்பவளுக்காய்
எப்போதும் ஏன்
உன்கையில்
சந்தேகக்கொள்ளி!.
8 comments செப்டம்பர் 23, 2009
| Previous Posts |