உமாவும் கவிதையும்:–

 

1.jpeg

புதிதாக பேசுகிறாய்
மரியாதையுடன்
பிடித்த செல்லங்களும்
பிடிக்காத வாடி போடிகளும்
வாய்க்குள்ளேயே
நின்றுவிட்டனவோ
என் காதுகளில்
ஒலிக்காமல்

பொருந்தாத
வாங்க போங்கவால்
தள்ளி நிற்கிறது அன்பு
தடுமாறும் உனை
சரி செய்யவோ
என்னால் முடியாது என
பதில் சொல்லவோ
சரிடா வருகிறேன் என்று
விடை பெறுகிறேன் நான்

Add a comment பிப்ரவரி 2, 2016

உமாவும் கவிதையும்:

1

என் கனவுகளைபோலவே
அழகானவன் நீ
நட்சத்திரங்களின் அணிவகுப்பு
அப்படியே உன் விழிகளில்
என் அழகில் விழி விரியும்
உன் அழகால் பட்டிமன்றம்
நிலவு யார் என்று
குறும்புகளால் வேய்கிறாய்
ஜரிகை வேலைப்பாடுகள்
அமுது பொழியும் உன் அன்பால்
நனைந்து நனைந்து
மெருகுகேற்கிறேன் நான்
ஆனாலும் தவிக்கிறேன்
அழகானவன் எப்போதும்
கனவாகவே
இருப்பதால்

Add a comment ஜனவரி 27, 2016

கனவுகளை
கொன்றவர்கள்
வாழ்வதில்லை
நிஜத்துள்

Uma Soundharya's photo.

Add a comment ஜனவரி 11, 2016

உமாவும் கவிதையும்:–

 

நேற்று அந்தி மாலையின்
இளஞ்சிவப்பில்
கலந்திருந்தாய் நீ

குளத்திற்கு மேலே
வந்த வண்ணத்தில்
கண்டு கொண்டேன்
உன் இருப்பை

உறங்கச்செல்லும் சூரியன்
உண்டு தயாராகும் வேலையில்
அவசரமாய் கதிர் தள்ளி
அள்ளிக்கொள்கிறாய் எனை

இருள் கவிய கவிய
மறையும் நீ
மறக்காமல் பூசுகிறாய்
வண்ணத்தை என் மீது

உனை நினைத்து
பயணிக்கையில்
முன்செல்லும்
வாகனங்கள்
அதே சிவப்பு
வண்ணத்தை
அப்படித்தான் பூசி
விளையாடுகின்றன
உன் பெயரை சொல்லி சொல்லி

Uma Soundharya's photo.

Add a comment ஜனவரி 11, 2016

குமிழ்சிரிப்புடனே
குனிகிறது
எழுத்தாணி
உனை எழுதுகையில்

Uma Soundharya's photo.

Add a comment ஜனவரி 11, 2016

உமாவும் கவிதையும்:-

 

பரிசளிக்க காத்திருக்கிறேன்
கந்தல் இதயத்தின்
வாசனையை
காந்தள் கண்ணீரின்
உவர்பை
கசிந்த நட்பின்
ஸ்பரிசத்தை
கூடவே
காதலின் கடைசி
முத்தத்தை

Uma Soundharya's photo.

Add a comment ஜனவரி 11, 2016

உமாவும் கவிதையும்:

உன் சாயல் ஒத்த
பூனை ஒன்று
உலவுகிறது என் வீட்டில்

எனை ரசித்து நடக்கும்
அதன் கண்களில்
உன் கிறக்க விழிகள்
அப்படியே

என் விரட்டலுக்கு பயந்து
ஒரு நொடி சீறி
மறு நொடி பதுங்குகிறது
உனைப்போல்

உண்டதும் உறங்கும்
உன் குணத்தால்
உதைபடுகிறது
அதுவும்

சில சமயம்
முனிவன் போல்
வேப்ப மர நிழலில்
தியானிக்கிறது
உடல் பயிற்சி என்ற பெயரில் நீ
உல்லாசமாக
படுத்திருப்பது போல்

இவை அத்தனையும்
ஒத்துப்போவதாக
எனக்குரைக்க
தப்பாது செய்ததுவும்
தாமதமாகும் என்
வேலைப்பொழுதுகளில்
ஓயாமல் கத்திக்கொண்டிருந்தது
மியாவ் மியாவ் என்று

 

Uma Soundharya's photo.

Add a comment ஜனவரி 11, 2016

உமாவும் கவிதையும்:

“சரிவிடு”
காதலின்
பொதுக்குழு தீர்மானம்

 1

Add a comment ஜனவரி 11, 2016

உமாவும் கவிதையும்:–

நிலவு தொலைத்த
இரவில்
மீன்களை சுமந்திருந்தேன்
வானமாய்
உன் காதல் திமிர்களைப்போல்
கண் சிமிட்டி இருந்தது அதுவும்

என் வகுப்பறையில்
கல் எறிவதும்
பூனைக்குட்டி எனக்கத்தி
என் செல்லப்பெயரை
மைதானத்தில்
பரப்புவதும்
உனக்கிட்ட பெயரை
கொட்டை எழுத்தில்
சுவற்றில் எழுதி
கண் விழித்து வரும் எனை
கதிகலங்க
செய்ததுவும்
மின்னி மின்னி மறைகிறது
மீன்களைப்போல்

சில நேரம் அனுமதி கோரியும்
பல நேரம் வரைமுறை மீறியும்
என் இரவுகளில்
பயணிக்கும் உன்னை
தொலைவில் வைத்து விட்டேன்
கதவுகளைத்தொலைத்து

நடு நிசிக்கு கூட
நம்ப முடியவில்லை நம் பிரிவை
வழக்கம்போல் விடிந்து
வரவேற்க காத்திருந்தது உனை

புரண்டு அழுது
புகைத்து குடித்து
எதுவும்
செய்துகொண்டிருக்கலாம்
நீ

வலியில் தொடுக்கும்
கவிதை தொகுப்பை
வரையத்தொடங்கினேன்
நான்
ஏனென்றால்
இன்றுதான் நம்
பிரிவின்
முதல் இரவு

Add a comment ஒக்ரோபர் 17, 2015

உமாவும் கவிதையும்

1

தைத்தலில் இருக்கிறது
சீருடைகள்
பை தனில் காத்திருக்கிறது
பாடப்புத்தகம்
தானும் அலங்கரிக்கிறது
தைத்தே காத்திருக்கும்
வகுப்பறைகள்
————————————————-
தான் மட்டும்
ருசித்து ருசித்து பாப்பா
எனக்கு வெறியூட்டுகிறாள்
புதிய புத்தக வாசனை
நுகர்ந்து நுகர்ந்து
———————————————–
பேருந்தில் செல்லும் வழியில்
பள்ளி மைதானத்தில்
காண்பிக்கிறாள்
நாளை விளையாடிக்கொண்டிருக்கும்
அவள் பிம்பத்தை
———————————————————
சும்மாவாச்சும் பார்த்திட்டு வரலம்மா
என்றவளுடன் அசட்டுத்தனமென
நானும் சென்றேன்
பாப்பா என கட்டிக்கொண்டார்
வாட்ச்மேன் தாத்தா
கண்ணீரை கட்டுப்படுத்தி
எனைப்போல்
கைகட்டி பார்த்திருந்தது பள்ளி
—————————————————–
ஏன் பாப்பா
தமிழில் மதிப்பெண்
குறைந்தது என்றேன்
நம்ம தமிழ் தானம்மா
கோவிச்சுக்காது என்றாள்
—————————————————
தாத்தா நான் பாசாயிட்டேன்
உங்களுக்கு ஒரு சாக்லேட்
ஆயாவிற்கு ஒரு சாக்லேட்
பெஞ்சுக்கு ஒரு சாக்லேட்
போர்டுக்கு ஒரு சாக்லேட் என
மொத்தமாய் கொடுத்து வந்தவள்
திரும்பி ஓடிச்சென்று
இன்னொன்றும் கொடுத்தாள்
அந்த டஸ்பின்னுக்கும்
ஒன்னு கொடுங்களேன் என்று
———————————————-

Add a comment மே 26, 2015

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜூலை 2017
தி செ பு விய வெ ஞா
« மே    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Most Recent Posts